முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Friday, March 20, 2015

வருக வருக

வணக்கம்.

தங்கள் வரவு நல்வரவாகுக.

சங்கத்தமிழ் என்னும் இனிய சோலைக்குள் உங்களை இட்டுச்செல்லும் நுழைவாயில் இது.

அச் சோலையின் இன்னிழலில் தங்கள் இனிய பொழுதை இனிதே கழியுங்கள்.

இங்கே பாடல்கள் உண்டு, உரைகள் உண்டு, ஆய்வுகளும் உண்டு.

சங்கச் செய்யுள்கள் ஒவ்வொன்றும் ஒரு தங்கச் சுரங்கம் போன்றவை.

அவற்றுள் நுழைந்து அங்கே பாளங்களாய்க் கிடக்கும் பொற்குவியலைக் கண்டு வியந்துபோவீர்கள்.

நன்றி.

ப.பாண்டியராஜா
 

மலைபடுகடாம்-அடிநேர் உரை


மலைபடுகடாம்
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

  

கருக்கொண்ட மேகங்கள் ஒன்றுகூடிய கருமை நிறங்கொண்ட பரந்த வானில்
விண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப் போன்று, தாளங்களைத் தட்டிப்பார்த்து,
உறுதியான வாரால் இறுகக் கட்டிய மத்தளத்துடன், சிறுபறையும்,
நன்றாக உருக்கப்பட்டு ஒளிர்கின்ற தகடாகத் தட்டப்பட்ட கஞ்சதாளமும்,
மின்னுகின்ற கரிய மயில் இறகுகளின் அழகிய கொத்து(கட்டப்பட்ட) கொம்பு வாத்தியமும் சேர்த்து,                         5
துளைகள் இடையிடையே விடப்பட்ட, யானையின் துதிக்கை போன்ற குழலமைப்புக்கொண்ட,
இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்,
பாடுவதைச் சுருதி குன்றாமல் கைக்கொள்ளும் இனிய வேய்ங்குழலும் நெருக்கமாகச் சேர்க்கப்பட்டு,
(தாளத்திற்கு)இடைநின்று ஒலிக்கும் (தவளையின்)அரித்தெழும் ஓசையையுடைய தட்டைப்பறையும்,
அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும்,             10
காலவரை காட்டுவதற்கு ஒலிக்கும் ஒருகண் பறையும், இன்னும் பிற இசைக்கருவிகளும்,
கார்காலத்தே கொள்ளப்படும் பலாவின் காய்களைக்கொண்ட கொத்தைப் போல,
சமமாய் எடைகட்டி(பைகளில் இட்டு வாயின் சுருக்கை)இறுக்கித் தோளின்(இருபுறமும்) தொங்கவிட்ட பைகளை உடையவராய் -
கடுக்காய் மரம் நெருங்கி வளர்ந்த இடம் பெரிதான மலைச்சரிவில்
பரப்பி வைத்ததைப் போன்றிருக்கும் பாறைகளின் பக்கத்தே,                                                                               15
(கீழே கிடப்பதை)எடுத்து நிறுத்திவைத்ததைப் போன்ற குறுகலான (ஏறுதற்குக்)கடினமான சிறிய வழியை,
தொடுக்கப்பட்ட அம்பினை உடையவராய்த் தம் துணைவியரோடே சேர்ந்திருக்கும் கானவர்,
இடற்பாடு செய்யாமல், போவோர் வருவோரை (வழிகாட்டியும் உதவியும்)போகச்செய்யும்
பாறைக்குன்றின் உச்சியில், நடந்துபோகும் கடினத்தை(யும்) பெரிதாகக்கொள்ளாமல்,
உடைத்து அமைக்கப்பட்ட பாதையின் செங்குத்தான பகுதியில் (பழைய)வழித்தடத்தையே பார்த்து நடந்து -       20
(கையில் சுற்றியுள்ள)தொடியின் திருக்கினைப்போன்ற ஒன்பது என்னும் எண் உண்டான வார்க்கட்டினையும்,
(பேய்க்குப் பகையாகிய)வெண்சிறுகடுகளவும்(=சிறிதளவும்) இசைச் சுருதியில் தவறு இல்லாது
ஒலிநயத்தைக் கூர்ந்து கேட்டுக்கேட்டுக் கட்டிய வகிர்ந்து முறுக்கேற்றப்பட்ட நரம்பினில்
கழலைகள் முற்றிலும் அகலுமாறு சிம்பெடுத்து, வரகின்
கதிர்(மணிகள்) ஒவ்வொன்றாக உதிர்ந்ததைப்போல நுண்ணிய துளைகளை இட்டு,                                25

மலைபடுகடாம்-சொற்பிரிப்பு மூலம்


மலைபடுகடாம்
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

  

திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்                                     மலை233,திரு9,திரு116,பெரும்135,மது 581
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து                          திரு 121,மது 560,குறி 49
திண் வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில்                                      நெடு 175
மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு                                     5         
கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்                             மலை 533
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ
நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை                                மது 612
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி                                        10
நொடி தரு பாணிய பதலையும் பிறவும்
கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப                                     மலை 143
நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர்                                                   மலை 365,515
கடு கலித்து எழுந்த கண் அகல் சிலம்பில்
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின்                                      15           மது 278
எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி
தொடுத்த வாளியர் துணை புணர் கானவர்
இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும்                            பெரும் 39-41
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி                                      20
தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்                                    பெரும் 14,15
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா                                               பொரு 18
குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின்                                          திரு 140
அரலை தீர உரீஇ வரகின்                              
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ                                        25           பெரும் 8

மலைபடுகடாம்-மரபு மூலம்


மலைபடுகடாம்
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
 

திருமழை தலைஇய விருணிற விசும்பின்
விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்
திண்வார் விசித்த முழவொ டாகுளி
நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டின்
மின்னிரும் பீலி யணித்தழைக் கோட்டொடு                                         5
கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பி
னிளிப்பயி ரிமிருங் குறும்பரந் தூம்பொடு
விளிப்பது கவருந் தீங்குழ றுதைஇ
நடுவுநின் றிசைக்கு மரிக்குரற் றட்டை
கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி                                                    10
நொடிதரு பாணிய பதலையும் பிறவுங்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்
கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பிற்
படுத்துவைத் தன்ன பாறை மருங்கி                                                           15
னெடுத்துநிறுத் தன்ன விட்டருஞ் சிறுநெறி
தொடுத்த வாளியர் துணைபுணர் கானவ
ரிடுக்கண் செய்யா தியங்குந ரியக்கு
மடுக்கன் மீமிசை யருப்பம் பேணா
திடிச்சுர நிவப்பி னியவுக்கொண் டொழுகித்                                           20
தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவிற்
கடிப்பகை யனைத்துங் கேள்வி போகாக்
குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பி
னரலை தீர வுரீஇ வரகின்
குரல்வார்ந் தன்ன நுண்டுளை யிரீஇச்                                                      25

பட்டினப்பாலை-அடிநேர் உரை


பட்டினப்பாலை
கடியலூர் உருத்திரங்கண்ணனார்

 
பழிச்சொல் இல்லாத புகழையுடைய, சுடர் வீசும் வெள்ளியாகிய மீன்
(தான் நிற்பதற்குரிய)வடதிசையினின்றும் மாறி தென்திசையில் சென்றாலும்,
தன்னை(மேகத்தை)ப் பாடிய, நீர்த்துளியையே உணவாகக்கொண்ட
வானம்பாடி வருந்த மழை பெய்யாமற்போக,
மேகம் பொய்த்தாலும் தான் பொய்யாத (காலந்தோறும் வருகின்ற                     5
(குடகு)மலையை உற்பத்தியிடமாகக்கொண்ட கடற்பக்கத்துக் காவிரி(யின்)
நீர் பரந்து பொன்(போல் விளைச்சல்) செழித்துப்பெறுகும் - (28-பெரிய சோழநாட்டில்),
விளைதல் தொழில் அற்றுப்போகாத அகன்ற வயல்களில்,
கார்காலத்ததைப்போன்ற(செழுமையான) கரும்பு(ப் பாகு)மணக்கும் கொட்டிலின் (அடுப்பு)
நெருப்பின் அனல் சுடுகையினால், அழகு  கெட்டு                                         10
நீரையுடைய வயலில் உள்ள நீண்ட நெய்தல்
மலர் வாடும் வயல்வெளிகளில்,
காய்ந்த செந்நெற்கதிரைத் தின்ற,
பருத்த வயிற்றையுடைய எருமை (ஈன்ற)முதிர்ந்த கன்றுகள்,
நெற்கூட்டினுடைய நிழலில் உறக்கத்தைக் கொள்ளும் - (28-பெரிய சோழநாட்டில்),             15
கொத்துக்கொத்தான காய்களையுடைய தென்னையையும், குலைகளையுடைய வாழையினையும்,
(நன்கு காய்த்த)காயையுடைய பாக்கு மரத்தையும், மணம் கமழும் மஞ்சளையும்,
கூட்டமான மாமரங்களையும், குலைகளையுடைய பனையினையும்,
கிழங்கையுடைய சேம்பினையும், முளையினையுடைய இஞ்சியினையும் உடைய - (28-பெரிய சோழநாட்டில்),
அகன்ற மனையின் பரந்த முற்றத்தில்                                                20
பளிச்சிடும் நெற்றியையும், கபடமற்ற பார்வையையும்(கொண்ட),
நேர்த்தியான நகைகளை அணிந்த பெண்கள், உலருகின்ற நெல்லைத் தின்னும்
கோழியை (விரட்ட)எறிந்த வளைவான அடிப்பகுதியையுடைய பொன்னாற்செய்த காதணி,
பொன் காப்பு அணிந்த கால்களையுடைய சிறுவர் (குதிரை பூட்டாமற் கையால்)உருட்டும்,
மூன்று சக்கர நடைவண்டியின் முன்செல்லும் வழியைத் தடுக்கும்                           25



பட்டினப்பாலை-சொற்பிரிப்பு மூலம்


பட்டினப்பாலை
கடியலூர் உருத்திரங்கண்ணனார்

 
வசை இல் புகழ் வயங்கு வெண் மீன்                   
திசை திரிந்து தெற்கு ஏகினும்                                    மது 108            
தன் பாடிய தளி உணவின்                        
புள் தேம்ப புயல் மாறி                            
வான் பொய்ப்பினும் தான் பொய்யா                                            5   
மலை தலைய கடல் காவிரி                      
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி
கார் கரும்பின் கமழ் ஆலை
தீ தெறுவின் கவின் வாடி                                                                    10
நீர் செறுவின் நீள் நெய்தல்
பூ சாம்பும் புலத்து ஆங்கண்
காய் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழு குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்                                                              15
கோள் தெங்கின் குலை வாழை
காய் கமுகின் கமழ் மஞ்சள்
இன மாவின் இணர் பெண்ணை
முதல் சேம்பின் முளை இஞ்சி
அகல் நகர் வியல் முற்றத்து                                                              20
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்
கோழி எறிந்த கொடும் கால் கனம் குழை
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்                                 பட் 295
மு கால் சிறு தேர் முன் வழி விலக்கும்                                  25    பெரும் 249

பட்டினப்பாலை-மரபு மூலம்


பட்டினப்பாலை
கடியலூர் உருத்திரங்கண்ணனார்

 
வசையில்புகழ் வயங்குவெண்மீன்
றிசைதிரிந்து தெற்கேகினுந்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா                                     5
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்
விளைவறா வியன்கழனிக்
கார்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவிற் கவின்வாடி                                                    10
நீர்ச்செறுவி னீணெய்தற்
பூச்சாம்பும் புலத்தாங்கத்
காய்ச்செந்நெற் கதிரருந்து
மோட்டெறுமை முழுக்குழவி
கூட்டுநிழற் றுயில்வதியுங்                                                 15
கோட்டெங்கிற் குலைவாழைக்
காய்கமுகிற் கமழ்மஞ்ச
ளினமாவி னிணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளையிஞ்சி
யகனகர் வியன்முற்றத்துச்                                                 20
சுடர்நுதன் மடநோக்கி
னேரிழை மகளி ருணங்குணாக் கவருங்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்                            25

குறிஞ்சிப்பாட்டு-அடிநேர் உரை


குறிஞ்சிப்பாட்டு
கபிலர்

 

 தாயே வாழ்க, (நான் கூறுவதை)விரும்பிக்கேள், அன்னையே, பளிச்சிடும் நெற்றியையும்
செழித்து வளர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என்னுடைய தோழியின் உடம்பிலுள்ள
தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்(பற்றி)
அகன்ற உட்புறங்களையுடைய ஊரில் (அந் நோய்பற்றி)அறிந்தோரைக் கேட்டும்,
(கடவுளரை)வாயால் வாழ்த்தியும், வணங்கியும், பலவித பூக்களைத் தூவியும்,                                          5
வேறுபட்ட பல வடிவங்களையுடைய தெய்வங்களை மனத்தில் எண்ணி,
நறுமணப்புகையும் சந்தனமும் படைத்தும், மனம்கலங்கி,
குறையாத மயக்கத்தையுடையளாய் நீயும் வருந்துகிறாய்;
(அவளுடைய)நல்ல அழகு கெடவும், நறுமணமிக்க தோள்கள் மெலியவும்,
வளை (கழலுதலைப்)பிறர் அறியவும், தனிமைத் துயர் (அவள் உள்ளத்தில்)தோன்றி வருத்தவும், 10
(தன்)மனத்துள்ளே மறைந்து உறைந்து கிடக்கும் (ஆற்றுதற்கு)அரிய துன்பத்தை,
(என்னுடைய)பேச்சுச் சாதுரியத்தால் (அவளை)நெருக்கி விசாரிக்கையில் -
முத்தாலும், மாணிக்கத்தாலும், பொன்னாலும், அவ்வளவு(மிகுந்த)
நேர்த்தியாக அமைந்த நகைகள் சீர்குலைந்துபோனால் (மீண்டும்)சேர்த்துக்கட்ட முடியும்;
(ஆனால் தமக்குரிய)நற்குணங்களின் தன்மையும், உயர்ந்த நிலையும், ஒழுக்கமும் சீர்குலைந்தால்,                          15
கறை போகும்படி கழுவி பொலிவுள்ள புகழை (மீண்டும்)நிறுவுதல்,
குற்றமற்ற அறிவையுடைய பெரியோர்களுக்கும், முன்புபோல இருந்த நிலை
எளிய காரியம் என்னார் தொன்மையான நூலை அறிந்தோர்;
(என் பெற்றோரின்)விருப்பமும் (எனது)மடனும் ஒருசேர நீங்கிப்போக,
நெடிய தேரையுடைய என் தந்தையின் அரிய காவலை(யும்) மீறி,                                                                  20
தலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது என்று
(நாம் என் தாய்க்கு)அறிவுறுத்தலால் நமக்குப் பழியுமுண்டோ?(இல்லை)
(பெற்றோர் நம்)வழிக்கு வரவில்லை என்றாலும் (இறக்குவரை)பொறுத்திருக்க,
மறு பிறப்பிலாவது (எங்கள் மணம்)பொருந்திவரட்டும் நமக்கு என்று கூறி,